Amruthanayaki Sametha Naganathaswamy Temple, Paamani
Location:
This temple is situated on the north bank of pambani river at a distance of 2 km north of Raja Mannargudi in Tiruvarur district. This temple has town bus and minibus facility from Mannargudi. Can also come by auto.
அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி திருக்கோயில், பாமணி
அமைவிடம் :
இக்கோயில் திருவாரூர் மாவட்டம் ராஜ மன்னார்குடிக்கு வடக்கே 2.கி.மீ.தொலைவில் பாம்பணி ஆற்றின் வடபுறம் அமைந்துள்ளது. தேவாரம் பாடப்பெற்ற தலங்களுள் ஒன்றாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்களாலும் பாடப்பெற்றது. இக்கோயிலுக்கு மன்னார்குடியில் இருந்து டவுன்பஸ், மினிபஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் வரலாம்.
தலவரலாறு :
சூதமா முனிவர் சிவனின் பெருமைகளையும் சிவலீலைகளையும் பற்றி தன் சீடர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது சீடர்கள் சிவபெருமான் பசுவிற்கு கைலாச காட்சி கொடுத்த விவரத்தையும் பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களுக்கு புனிதம் உண்டானதையும் பற்றி கூறுமாறு கேட்டனர். அதற்கு அவர் ஒரு சமயம் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது மாலை நேரமானதால் இங்கு இளைப்பாற தன் சீடனிடம் அஸ்தி மூட்டையை கொடுத்து விட்டு சந்தியாவந்தனம் செய்ய சென்றார். அப்போது சீடன் அஸ்தி மூட்டையை பிரித்து கலசத்தை பார்த்தான். கலசத்தில் சுவர்ணமாக இருந்தது. உடனே பயந்து மூடி வைத்து விட்டான். சுகல முனிவர் வந்து மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்து காசிக்கு சென்றார். அங்கு கலசத்தை பிரித்த போது அஸ்தியின் சாம்பலை பார்த்த சீடன் உடனே அவரிடம் முன்பு சந்தியாவந்தனம் செய்த இடத்தில் கலசத்தில் சுவர்ணமாக இருந்த விவரத்தை கூறினான். உடனே அவர் “அதுவே காசியை விட புனிதமான இடம்” என்று கூறி மீண்டும் இங்கு வந்து ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற குளத்தின் கரையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆலயம் அமைத்து அக்குளத்திலேயே தன் தாயாரின் அஸ்தியையும் கரைத்து இங்கேயே தங்கி விட்டார்.
அப்போது அவர் தன் குடிலில் ஒரு பசுவை வளர்த்து வந்தார். ஒரு நாள் பசு மேய சென்ற போது ஒரு புற்றின் அருகில் சென்றதும் தன்னை அறியாமல் அப்புற்றின் மீது நின்றதும் பாலும் ஈர்க்கப்பட்டு பசுவின் மடியிலிருந்து பால் சொரிந்தது. பிறகு தினமும் அது போலவே மாடு அப்புற்றின் மீது பால் சொரிந்து வந்தது. சுக்லர் மேயச் சென்ற பசு திரும்பி வந்ததும் ஏன் பால் கொடுக்கவில்லை என்று எண்ணி ஒன்றும் புரியாமல் ஒரு நாள் பசுவை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டு அவரும் ஒளிந்து அப்பசுவை பின் தொடர்ந்தார். அப்போது பசு புற்றின் மீது ஏறி நின்று பால் சுரப்பதை கண்ணுற்ற அவர் பசு ஏதோ ஒரு கோபத்தில்தான் பாலை யாருக்கும் பயன்படாமல் புற்றின் மீது சுரப்பதாக எண்ணி ஒரு கம்பை எடுத்து மாட்டை அடித்தார். மாடு உடனே கோபமுற்று புற்றை முட்டியது. புற்றும் மூன்று பிளவாக பிளந்து உள்ளே இருந்த லிங்கம் வெளிப்பட்டது. பிறகு மாடு ஓடிச் சென்று தெற்கு திசையில் இருந்த குளத்தில் விழுந்து இறந்தது. உடனே சிவபெருமான் ரிஷபாரூடராஸ் கைலாய காட்சி கொடுத்து மாட்டை உயிர்பித்து அதன் பால் அபிஷேகத்தால் சந்தோஷமானதாக தெரிவித்து என்ன வரம் வேண்டும் என்று அந்த பசுவை கேட்க அது தன்னிடமிருந்து கிடைக்கும் பொருட்கள் எல்லாம் ஈசனுக்கேஅர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. ஈசனும் மிகவும் மகிழ்ந்து அவ்வாறே ஆகட்டும் என்று ஆக்ஞையிட்டார். அது முதல் பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய் கோமியம், சாணம் போன்றவை பஞ்சகவ்யம் என்றழைக்கப்பட்டு புனிதமான பொருட்களாக ஈசனுக்கு இன்றும் அபிஷேகத்திற்கு உகந்ததாக ஆனது. சுகலரும் சுயம்புவாக உருவான ஈசனை வணங்கி வழிபட்டு பெரும்பேறு அடைந்தார்.
அப்போது விஷ்ணு பகவான் சயனித்திருக்கும். அஷ்ட நாகங்களான, வாசுகி, கார்கோடன், பத்மன், மகாபத்மன், சங்கன். சங்கபாலன், குளிகன், அனந்தன் ஆகிய அனைவருக்கும் தலைவரான ஆதிசேஷன் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது உண்டான விஷத்தை ஈசன் உண்டதால் தனக்கும் தோஷம் உண்டானதாகக் கருதி அதற்கு பரிகாரம் செய்ய எண்ணியபோது “பாதாளத்தில் இருந்து உண்டான பாதாளேச்வரரை வழிபட்டால் மனக்கேதம் தீரும்” என்று அசரீரி சொன்னதால் ஆதிசேஷன் தனஞ்செய முனிவராக மனித முகமும் சர்ப்ப உடலுடன் தோன்றி இத்தலத்திற்கு வந்து மாடு முட்டியதால் உடைந்த லிங்கத்தை சேர்த்து வழிபட்டு தன் தோஷநிவர்த்தி பெற்றார். அன்று முதல் திருப்பாதாளேச்வரர் சமஸ்கிருதத்தில் சர்ப்பபுரீஸ்வரர் என்று அழைக்கப்பெற்று தற்போது தமிழில் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். ஆதிசேஷனும், தனஞ்செய முனிவராக சுவாமியை வணங்கிய நிலையில் தனி சந்நதியில் வீற்றிருந்து ராகு, கேது, தோஷ நிவர்த்தி வழங்குகிறார்.
புராணங்களில் திருப்பாதாளேச்வரர்
1. முசுகுந்த சக்ரவர்த்தி தரிசித்து திராட்சை நிவேதனம் செய்தது:
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உண்டான போரில் ஒரு சமயம் தேவர்கள் தோற்று அசுரர்களால் விரட்டப்பட்டனர். இதையறிந்த முசுகுந்த சக்ரவர்த்தி இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அசுரர்களை போரிட்டு வென்றார். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும் கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக அளித்தார். அவர் அந்த லிங்கத்துடனும் திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சந்நதிக்கு வந்தார். அப்போது “திருப்பாதாளேச்வரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக” என்று அசரீரி சொல்ல கேட்டு அவர் இங்கு வந்து திருப்பாதாளேச்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அது முதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு நிவேதனமாக செய்யப்படுகிறது.
2. நீலத்வஜ தீர்த்த வரலாறு:
அம்சத்வஜ மகாராஜாவின் புதல்வன் நீலத்வஜ மகாராஜா இக்கோயிலின் மேல்புறம் (நீலத்வஜ தீர்த்தம் என்ற நம்பிகுளம்) ஒரு குளம் வெட்டி ஒரு சத்திரம் கட்டி அன்னதானங்கள் செய்து அதனால் சீரும் சிறப்புமாக வாழ்ந்தான். இதனால் அவன் அன்னத்வஜன் என்று அழைக்கப்பட்டான்.
3. பிப்பலாயன் வரலாறு:
பாண்டி நாட்டிலுள்ள ஆதி ரத்னேஸ்வரி என்ற ஸ்தலத்திலிருந்து பிப்பலாயன் என்னும் அந்தணனுக்கு குன்மநோய் வந்து தீர்க்க முடியாததாய் இருந்தது. அவன் வில்வாரண்யத்தில் தீர்த்தமாடி வில்வாரண்யரை வணங்கிய போது அசரீரியாக “நீ பாதாளேச்வரம் சென்று தீர்த்தமாடி சிவ தரிசனம் செய்தால் உன் ரோகம் நீங்கும்” என்றது. உடனே அவன் பல கோயில்களுக்கும் சென்று கடைசியில் பாதாளேச்வரம் வந்து தீர்த்தமாடி நாகநாத சுவாமியை தரிசனம் செய்து சிவார்ப்பணம் செய்யப்பட்ட நைவேத்யத்தை சாப்பிட்டவுடன் அவன் குன்ம நோய் நீங்கியது.
4.தைப்பூச வரலாறு:
மகத நாட்டில் தர்மாரண்யம் என்ற அக்ரஹாரத்தில் தேவசர்மா என்ற அந்தணர் இருந்தார். அவருக்கு ப்ருகு மகரிஷியின் புதல்வி காந்திமதியை திருமணம் செய்தனர். அவள் பெயருக்கு ஏற்றார்போல் மிகவும் அழகாயிருந்தாள். ஒரு சமயம் தேவசர்மா அவருடைய தமையன் செய்த யாகத்திற்கு சென்றபோது அவருடைய இல்லத்திற்கு அதிதியாக அகத்தியர் வந்தார். அவர் மிகுந்த பசியில் “பவதி பிக்ஷாந்தேகி” என்று உணவு கேட்டபோது அவள் தன் அழகை ரசித்துக்கொண்டு வீட்டில் யாரும் இல்லை என்றும் தன் கணவரும் வெளியூர் சென்றுள்ளதாகவும் கூறினாள். அவர் மீண்டும் தனக்கு பசியாய் இருப்பதாய் கூறவே அவள் அலட்சியம் செய்தாள். அதனால் அவர் கோபம் கொண்டு “பிசாசாகக் கடவாய்” என்று சாபமிட்டார். அவளும் கோர உருமாறி வீட்டைவிட்டு கத்திக்கொண்டே சென்று விட்டாள். யாகத்திற்குச் சென்ற தேவசர்மா தன் வீட்டிற்கு திரும்பி மனைவியை காணாமல் தேடினார். அப்போது அருகில் இருந்தவர்கள் மூலமாய் விஷயம் அறிந்து தன் மனைவியை பல இடங்களிலும் தேடினார். ஒரு நாள் நடுக்காட்டில் தன் மனைவியைக் கண்டு அவளை அழைத்தார். அவள் தன் கணவனை அறியாது கண்டபடி திட்டினாள். பிறகு அவர் அவளை பலவாறு சமாதானம் செய்து அழைத்துக்கொண்டு பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று தரிசனம் செய்து பின் பரத்வாஜ முனிவர் ஆசிரமம் வந்தபோது அவர் தன் ஞான திருஷ்டியால் இவர்கள் நிலை அறிந்து “தை மாதம் பூச நட்சத்திர தினத்தில் திருப்பாதாளேச்வரம் பாம்பணி ஆற்றில் தீர்த்தமாடும் போது தரிசனம் செய்து நீங்களும் தீர்த்தமாடி நாகநாதசுவாமியை வழிபட்டால் சாபம் நீங்கும்” என்று சொன்னதைக் கேட்டு அவர்களும் திருப்பாதாளேச்வரம் வந்து தை பூச்ச தீர்த்தவாரி தரிசனம் செய்து நாகநாதசுவாமியை வழிபட்டவுடன் சாபம் நீங்கப் பெற்று காந்திமதி தன் பழைய உருவை அடைந்தாள். பிறகு அவர்கள் இருவரும் இங்கேயே தங்கி நாகநாதசுவாமிக்கு தங்கள் பணிவிடை செய்து சிறப்பாக இல்லறம் நடத்தி 4 குழந்தைகளை பெற்றனர். அவர்களுடைய புத்திரர்கள் பெயர் நந்தன், பத்ரன், மதி, கிருதி ஆகும் . இன்றும் இக்கோயிலில் தைபூச தீர்த்தவாரி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் தரிசனம் செய்து நாகநாதசுவாமியின் அருள் பெற்று வருகின்றனர்.
5. ஸ்தல விருட்ச புராணம்:
திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது சிறப்பான 4 மாங்கனிகள் தோன்றின. அதையெடுத்த பிரம்மன் (நான்முகன்) ஒன்றை வினாயகருக்கும் மற்றொன்றை ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு நான்காவது பழத்தை இத்தலத்திற்கு கொண்டுவந்து நாகநாதசுவாமிக்கு பழத்தை பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் கொட்டையை பிரம்ம தீர்த்தத்தின் வடகரையில் ஊன்றினார். அதுமுதல் மாமரம் இத்தல விருட்சமாகியது. இன்றும் மாம்பழச்சாறு விசேஷமாய் இத்தலத்தில் நாகநாதருக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.