பக்தாபீஷ்டப்ரதாயினி, அனூபமஸ்தனி சமேத மனோஞ்யநாதர் திருக்கோவில் , திருநீலக்குடி
மக்கள் வழக்கில் திருநீலகுடி அல்லது தென்னலகுடி என அழைக்கப்படுகிறது.
கும்பகோணம் காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரத்தை அடுத்து 6 கி.மீ. இல் உள்ளது இத்தலம். வடக்கே திருவிடைமருதூரிலிருந்தும் வரலாம்.
குடந்தையிலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் காரைக்கால் செல்லும் பேருந்துகள் இத்தலத்தில் நின்று செல்கின்றன.
சாலையிலிருந்து பார்த்தாலே கோயில் தெரிகிறது.
கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. மொட்டை கோபுரத்தின் மேல் ஒரு மண்டபம் போன்று அமைத்துள்ளனர்.
கோயில் வாசலிலேயே குளம் உள்ளது. கோயிலின் வாசலில் குளக்கரையில் இருபுறமும் வீடுகள் அழகுற உள்ளன.
வாயிலைக்கடந்து உச்சென்றால் நந்தி, த்வஜஸ்தம்பம். நேரே தெரிகிறார் மூலவர்.
உட்ப்ரகாரத்தில் சூரியன் மற்றும் பிரம்மா வழிபட்ட லிங்கங்கள்; விநாயகர், ஷண்முகர், விஸ்வநாதர், மஹாலட்சுமி, தெய்வீகப்பாலா மரம், நவகிரகம், பைரவர் சன்னிதிகள் உள்ளன. தென்மேற்கு மூலையில் மார்க்கண்டேயர் இருக்கிறார்.
ஸ்வாமி சன்னிதிக்கு வலப்புறம் இரண்டு அம்மன் சன்னிதிகள் தனிக்கோயிலாக உள்ளன. ஒரு அம்பாளின் பெயர் பக்தாபீஷ்டப்ரதாயினி. இவள் தவக்கோயிலில் இருக்கும் அன்னை. மற்றொருவர் அனூபமஸ்தனி. கல்யாணக்கோலம். இருவர் சன்னிதிகளுக்கும் சேர்த்து ஒரு பிரகாரம் உள்ளது. பிரகாரத்தைச் சுற்றிவந்தால் பின்புறம் இருப்பது நந்தவனம்.
கோயில் தற்போதும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மரண பயம், எம பயம் உடையோர் இங்கு வந்து பெருமானைத் தொழுது, எருமை மாடு, எள் மற்றும் நீலப்பட்டுத்துணி ஆகியவற்றை தானம் செய்தால் பயம் நீங்கும் எனப்படுகின்றது.
நாடோரும் நான்கு கால வழிபாடுகள். சித்திரைப் பெருவிழா இத்தலத்தில் பெருமையுடையது.
இவ்விழாவின் பன்னிரண்டாம் நாளில் பெருமான் பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் சென்று வருவது அர்புதமான காட்சியாகும்.
ஏழூர்களாவன
ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி, திருநீலக்குடி.
இத்தலத்தில் பெருமான் மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்திருப்பதால் மார்க்கண்டேயர் பெருமானுக்கு எதிர்முகமாகப் போகிறார். கோயிலையொட்டி 5 தீர்த்தங்கள் உள்ளன. எதிரே உள்ளது தேவி தீர்த்தம்.
தல வ்ருக்ஷம்:
இக்கோயிலின் தலவ்ருக்ஷம் பலா மரம் மிகவும் சிறப்புவாய்ந்தது மற்றும் தெய்வீகமானதும்கூட.
மிகப்பெரியதான இம்மரம் எங்கெங்கோ வேர் விட்டிருக்கிறது. அதில் காய்க்கும் பலாப்பழத்திற்கு ஒரு சிறப்புள்ளது என மக்கள் கூறுகின்றனர். அதாவது, சுவாமிக்கு நிவேதனம் செய்து வைத்து எடுத்துச் சென்றால்தான் அதன் சுளைகள் ருசிக்கமுடியும். யாருக்கும் தெரியாமல் பழங்களை எடுத்துச் சென்று பழங்களை அறிந்து பார்த்தால் புழுக்கள் நிறையுமாம்.
பார்க்கடலில் அமுதம் கடைந்தபோது வெளிப்பட்ட கொடிய ஆலகால விஷத்தை உண்ட இறைவன் நீலகண்டன் ஆகி எழுந்தருளிய தலமாதலால் திருநீலகுடி என்றானது.
வசிஷ்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் ஆகியோர் வழிபட்ட தலம்.
சூரபத்மனின் தொந்தரவு தாங்க முடியாமல் இந்திரன் பிரம்ம லோகம் சென்றான். அங்கிருந்து எல்லோரும் சேர்ந்து கைலாசம் சென்றனர். அப்போது காமதேனுவும் உடன் சென்றது. அந்த சமயத்தில் யாகம் ஒன்று செய்ய முனைந்த வசிஷ்டர் காமதேனுவைக் காணாமல் கோபம் கொண்டு யாகத்திற்கு தகுதியற்றதாகக் கடவாய் என்று சபித்தார். அதனால் தனது தவப்பயனை இழந்து வாடினார். அதனைக் கண்ட நாரதர் வசிஷ்டரிடம், சிவனைப் பூஜிக்க காமதேனு பஞ்சவில்வவனம் சென்றுள்ளாள், நீங்களும் அங்கு சென்று தவம் செய்யுங்கள் என்று கூறினார். வசிஷ்டரும் அவ்வாறே சென்று மனோஞ்யநாத சுவாமியை வழிபட்டதால் காமதேனுவுக்கு யாகத்திற்கு தகுதியும், வசிஷ்டருக்கு கோபத்திலிருந்து சாந்தியும் கிடைக்கப்பெற்றன.
மார்க்கண்டேயர் சிறந்த செல்வத்தை அடைந்தார்
மிருகண்டு முனிவர் தனது மகன் மார்க்கண்டேயன் சிறந்த செல்வத்தை அடைய வேண்டுமென வசிஷ்டரிடம் வழிகேட்டார். வசிஷ்டர் மார்க்கண்டேயனை பஞ்ச வில்வ வனத்துக்கு அனுப்பி சிவனை வழிபடும்படி கூறினார். அதன்படி மார்க்கண்டேயர் திருநீலகுடிக்கு வந்து தைலாபிஷேகம், சப்தஸ்தானம் செய்து சிறந்த செல்வத்தை அடைந்தார் என புராணம் கூறுகிறது. மார்க்கண்டேயருக்கு உற்சவ விக்கிரகம் இத்தலத்தில் உள்ளது.
ஸ்வாமி தைலாப்யங்கேஸ்வர் ஆன கதை
ஈசன் சொன்னதைக் கேட்காமல் தனது தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்ற தட்சாயினி, அங்கு அவமானத்திற்கு உள்ளாகி சரீரத்யாகம் செய்துகொண்டாள். பின்பு ஹிமவானின் மகளாக பிறந்து சிவனை மீண்டும் அடையவேண்டும் என்று பிரார்த்திக்கிறாள்.
அப்போது பரமசிவன் தட்சனின் நடத்தை காரணமாக ஏற்பட்ட என் கோபக்கினி இன்னும் தணியவில்லை. நான் வில்வாரண்யத்தில் இருப்பேன். நீ ஆயிரம் வருடங்கள் தவம் செய்து என் கோபம் தணியும் வகையில் எனக்கு தைலாபிஷேகம் செய்யவிட்டுத் தணிப்பாய். உன் உத்தரவுப் பெற்ற தைலாபிஷேகம் செய்பவர்கள் எல்லா நன்மைகளையும் அடைவார்கள் என்று கூறினார்.
எனவே இக்கோயிலில் ஸ்வாமிக்கு தைலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. முன் காலத்தில் ஆறு மரக்கால் நல்லெண்ணை அபிஷேகம் செய்ததாகத் தெரிகிறது. சிவாச்சாரியார் கோமுகத்தை உடைத்த மாவினால் அடைத்து விட்டு, லிங்கத்தின் சிரசில் எண்ணையை மெதுவாக ஊற்றி தேக்க,
அவ்வளவு எண்ணெயும் லிங்கத்தினுள் உறிஞ்சப்படுவதாகக் கூறப்படுகிறது. கருங்கல்லால் ஆன லிங்கத்தினுள் அவ்வளவு எண்ணெயும் எங்கே போய்விடுகிறது என்பதே இன்றுவரையில் ஒரு ஆச்சரியம்.
அந்த காலத்தில் ஆலயத்தின் அருகிலேயே செக்கு ஆட்டி எண்ணெய் எடுத்து அபிஷேகம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அதற்கான அடையாளமாகக் குளக்கரையில் செக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்பிகைகள்:
இக்கோயிலில் இரண்டு அம்பிகைகள் உள்ளனர்.
இறைவனை அடைய தவக்கோயிலில் இருப்பவள் தான் பக்தாபீஷ்டப்ரதாயினி. மற்றொருவர் அனூபமஸ்தனி .
அபிஷேகத்திற்கு எடுத்து செல்லப்படும் எண்ணெய் முதலில் இந்த அம்பிகையின் சன்னிதியில்தான் வைக்கப்படும், பின்னர் எடுத்துச் செல்லப்படும். அம்பிகையிடம் உத்தரவு பெறுவதுதான் வழக்கம்.
ரோமசர் இங்கு அநேக ஆண்டுகள் தவமிருந்து, பின் மத்யார்ஜுனமாகிய திருவிடைமருதூர் சென்று அங்கு முத்தி பெற்றார். ஆகையால் இத்தலத்திற்கு ஆதிமத்யார்ஜுனம் என்று பெயர் உண்டு.
தேவாரம்
கல்லினோடு எனைப் போட்டி அமண்கையர்
ஒல்லை நீர் புகநோக்க என் வாய்க்கினால்
நெல்லு நீள் வயல் நீலகுடி அரன்
நல்ல நாமம் நவின்று வாழ்ந்தேன் அன்று.
திரு அருட்பா
ஏலக்குடி புகுந்த எம்மனோர்கு உண்மைத்தரு
நீலக்குடி விளங்கு நிஷ்களமே
விலாசம்
மனோஞ்யநாத சுவாமி திருக்கோயில்,
திருநீலக்குடி அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம்,
612 108.