Balambika sametha Nardhanapureeswarar, Thalayaalangadu
Location:
Thalayalankadu is the 93rd place among the sacred places on the south bank of Cauvery River in Chola Valanadu, which is full of sacred places and theerthas. It is a place with historical and mythological significance. On Thiruvaiyar to Kumbakonam road , it is at the 14th km.
Thalayalankadu is sung by Sundarar and Appar.
பாலாம்பிகை உடனுறை நர்த்தனபுரீஸ்வரர் , தலையாலங்காடு
இருப்பிடம்:
புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 93 வது தலமாக விளங்குவது திருத்தலையாலங்காடு. இது வரலாற்றுச் சிறப்பும், புராணச் சிறப்பும் மிக்க தலமாக விளங்குகிறது. இருப்புப் பாதை வழியில் செல்வோர் திருவாரூரில் இறங்கி, கும்பகோணம் செல்லும் பேரூந்து மார்க்கத்தில் 14 கி.மீ. பயணித்தால், தலையாலங்காட்டை அடையலாம்.
அப்பர், சுந்தரர் பாடிய தலம்.
தலத்தின் தொன்மை:
தலையாலங்கானத்துப் போர் தமிழக சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. பாண்டிய நெடுஞ்செழியன், இங்கு நடைபெற்ற போரில் சோழனை வென்றதால். ”தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்” எனப்பட்டான், எனப் புறநானூறு கூறுகிறது. இந்த சம்பவத்தை உண்மை என்று பறைசாற்றும் விதமாக, இந்த ஆலயத்தின் அருகில் பாண்டியன் மேடு, பாண்டியன் திடல் போன்றவை இன்னும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். போருக்கு முன்பாக இது ஒரே பெரிய கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு எல்லைக்குள் துண்டு துண்டாக சன்னதிகள் மதிற் சுற்றுகள் உள்ளன. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள புதுக்குடி என்ற திடலில் 100-க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் இருக்கின்றன.
கோயில் அமைப்பு:
ஊரின் நடுவில் அமைந்துள்ள இச்சிவாலயம், கிழக்கு நோக்கியது. எதிரில் மகிமை வாய்ந்த சங்க தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. இதில் அல்லி மலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. இதன் மேல்கரையில் படித்துறை வினாயகர் சன்னதி உள்ளது.
தெற்கு பிரகாரத்தில் காசி விஸ்வநாதரும் விசாலாக்ஷியும் தனி சன்னதி கொண்டுள்ளனர். கன்னி மூலையில் கணபதிக்குத் தனி சன்னதி உள்ளது. வடமேற்கு மூலையில் முருகன், வள்ளி. தெய்வானை சமேதராகக் காட்சி அளிக்கிறார். வடக்கு பிரகாரத்தில் ஸ்தல விருட்க்ஷமான 500 ஆண்டு பழமை வாய்ந்த பலாமரம் காணப்படுகிறது.
தல புராணம் :
தலத்து இறைவர் சதுர ஆவுடையார் மீது கருவறையில் தரிசனம் தருகிறார். இவரைத் தரிசிக்காமல் நாட்களை வீணாக்கி விட்டேனே என்று அப்பர் சுவாமிகள் பாடல்தோறும் குறிப்பிடுகிறார். கயிலை மலையை எடுத்த அரக்கனை மன்னித்து அவனுக்கு இராவணன் என்ற பெயர் கொடுத்த கருணாகரனாகவும் விளங்குவதாக அப்பர் பெருமானின் தேவாரப் பதிகம் நமக்கு எடுத்துரைக்கிறது.
திருநள்ளாற்றில் இருப்பது போலவே, அம்பாள் சன்னதியின் வாயிலருகில் கிழக்கு நோக்கியபடி, அனுக்கிரஹ சனி பகவான் சன்னதி கொண்டுள்ளார். சனிப் பெயர்ச்சியின் போது இவருக்கு விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது. எனவேதான், சுவாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் என்றும் ஆடல் வல்லநாதர் என்றும் பெயர் ஏற்பட்டது. கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியைப் பெற்றுக் கொண்டார். சரஸ்வதி தேவி பூவித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றாள். இக்கலியுகத்திலும் சங்கு தீர்த்தத்தில் நீராடுபவர்கள், குன்மம், முயலக நோய்,சித்தப்ரமை. வெண்குஷ்டம் முதலிய மகா ரோகங்களிலிருந்து நிவர்த்தி பெறுகிறார்கள்.