பூலோகநாயகி சமேத பூலோகநாத சுவாமி திருக்கோயில், திருமங்கலம்
காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சைத் தரணியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் திருக்கோயில்!
அமைவிடம்:
மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே திருமங்கலம் அமைந்துள்ளது. இவ்வூரின் அருகாமையில் புகழ்பெற்ற திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி , முருகமங்கலம் போன்ற கோயில்கள் அமைந்துள்ளன.
தலபுராணம் :
திருமங்கலத்தில் உள்ள கோயில் பூலோகநாதசுவாமி திருக்கோயில் என இன்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் ‘விக்கிரம சோழீசுவரம்’ எனக் குறிக்கப்படுகிறது.
திருமணஞ்சேரியில் ஈசனுக்கும் உமைக்கும் திருமணம் முடிகிறது. இதில் கலந்து கொண்டு தரிசிக்க என தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான் இப்படி பூலோகவாசிகளான சாதாரண மக்கள் நம் திருமணத்தைக் காண முடியாது வருந்துகின்றனரே என்ற எண்ணம் அம்மையப்பன் மனதில் தோன்றியது. உடனே, ஸப்தபதி என்ற சடங்கை நிறைவேற்றுகிறது போல் ஏழு அடி எடுத்து வைத்தனர். அம்மையும் அப்பனும் எந்தத் தலத்தில் தங்களது திருமணத்திற்கு ‘திருமாங்கல்யம்’ செய்யப்பட்டதோ, அந்தத் தலத்திற்கு வந்து நின்று காட்சி தந்தனர். இத்திருமணத்திற்கு மகா லட்சுமியே குபேரனிடம் பொன் எடுத்துக் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது.
எனவே, திருமணம் கைக்கூடவும், ‘திருமாங்கல்ய தோஷம்’ எது இருப்பினும் அகலவும் இங்கு வந்து தரிசிக்கலாம்.
ஈசனையே சரணடைந்து நற்பேறு பெறுவதே சாலச் சிறந்தது என்கிற காரணத்திற்காகவே ‘ஸப்தபதி ‘ கணத்தில் இத்தலத்திற்கு வந்திருந்த வசிஷ்டர் அருந்ததி முதலானோர் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்ய தலைப்பட்டனர். அதனை அவர்கள் செவ்வனே நடத்தி பூர்த்தி செய்யும் ‘ஆஹூதி’ வேளையில், அந்த வேள்வித் தீயிலிருந்து யாகத்தின் பயனே இது என காட்டும் வண்ணம், நம் பூலோக நாயகன். முன்னர் மார்க்கண்டேயனை காக்க எமனை உதைத்த காலாந்தகன் ‘கால சம்ஹாரமூர்த்தி’ கையில் ஏந்திப் பிடித்த சூலாயுதம் பிரயோகத்திற்கு ஏந்திய நிலையில் ‘மார்க்கண்டேயன் எமன்’ சகிதம் காட்சி தந்தருளினார்.
வசிஷ்டர் அருந்ததி முதலானோரும் இதர மக்களும் அனைவரும், இக்காட்சியில் மெய்விதிர்த்து மயிர்க் கூச் செறிந்து, ‘மகேஸ்வரா ஸம்போ சிவ சிவா’ என்று மண்ணில் வீழ்ந்து வணங்கினர். ஆகவே, சஷ்டியப்த பூர்த்தி, சதாபி ஷேகம் போன்ற நிகழ்வுகளை சிலா மூர்த்தமாக, பிரயோக கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சந்நதியில் வேள்விகளோடு இங்கு நடத்தப்படுகின்றது.
சிவராத்திரி அன்று முதல் ஜாம பூஜையை இந்த திருமங்கல பூலோகநாதர் சந்நதியிலும், இரண்டாம் ஜாம பூஜையை அருகிலுள்ள தலமான மாங்குடியில் சிவலோக நாதர் தலத்தை தரிசிப் பதிலும், மூன்றாம் ஜாம பூஜையை அதற்கும் அருகிலுள்ள பொய்கைகுடி நாகநாதர் ஆலயத்தில் தரிசித்தும், பின்னர் நான்காம் ஜாம பூஜையை மீண்டும் தொடங்கிய இடமான இதே திருமங்கல பூலோக நாயகி சமேத பூலோக நாதர் சந்நதியில் தரிசித்தும் நிறைவு செய்தால் மூவுலகிலுள்ள சிவலிங்கங்களையும் தரிசித்த பலன் கிட்டும்.
இக்கோயிலின் தெற்குச்சுவரில் காணப்படும் திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மைக் கொண்டான் என அரசர் பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டில், கணித சக்கரவர்த்தி என்பவர் இராஜேந்திர சோழீசுவரம் உடையார் கோயிலுக்கு திருமதில், திருவாசல் கட்டுவதற்காக நிலம் தானமாக அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. மேலும் இதே கல்வெட்டில் ‘விருதராஜ பயங்கர வளநாட்டில் ராஜராஜன் திருமங்கலத்தில் அமைந்துள்ள விக்கிரம சோழீசுவரம் உடையார் கோயிலுக்கும்’ நிலம் தானம் அளிக்கப்பெற்ற தாகக் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் ‘ராஜராஜன் திருமங்கலம்’ என்று இவ்வூர் பெயரிட்டு அழைக்கப்படு வதைக் காண்கிறோம்.
ஆணி மாண்டவ்ய மஹரிஷி தவத்தில் இருந்தபோது கொள்ளையர்கள் தாம் அரண்மனையில் கொள்ளையிட்ட முத்து மாலையை மாமுனி கழுத்தில் மாட்டி விட்டு ஒளிந்து கொண்டனர். அரண்மனைக் காவலர்கள் மஹரிஷியை யாரென்று அறியாது அவரையும் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று எண்ணி அரசனிடம் இழுத்துச் சென்றனர்.
கொள்ளையால் நாட்டில் தர்மம் பிறழ்ந்ததைப் பொறுக்க இயலா மன்னன் அனைவரையும் சிரச் சேதம் செய்யக் கட்டளை இட்டான். கழுவேற்றிய உடனேயே ஏனைய கொள் ளையர்கள் இறந்து விட பல நாட்கள் ஆகியும் நிஷ்டையில் இருந்த மஹரிஷி யோகத்தில் லயித்துக் கிடப்பதைக் கண்டு மன்னன் பதட்டமுற்று மஹரிஷியிடம் மன்னிப்புக் கோரினான். சினத்தில் வெம்மையால் விழித்த மஹரிஷி யம லோகம் சென்று தான் ஒன்றும் செய்யாத போது தனக்கு ஏன் இந்தப் பெரிய தண்டனை வரவுற்றது என வினவினார்.
யமமூர்த்தியோ மாமுனி சின்னஞ் சிறு பிராயத்தில் வண்டினை நூலில் கட்டி வைத்து விளையாண்டதின் விளைவு இது எனக் கூறிட, ‘செய்த தவறுக்கு அபரிமிதமான தண்டனை கண்ட நீ பூவுலகில் பிறந்து இகழப் படக் கடவாய்!’ என்று சாபமிட்டு விட்டார். அந்த எமமூர்த்தியே மஹாபாரதத்தில் விதுரனாகப் பிறந்து தர்ம தேவதா மூர்த்தியின் அம்சமாகையால் அறம் பிறழாது வாழ்ந்திடினும் கெரளவர்களால் பன்முறை இழிவு படுத்தப்பட்டார். விதுரர் இத்தலத்தில் பாண்டவர்களுடன் வழிபட்டு நன்னிலை பெற்றார்.