அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் , திருக்கொடியலூர்
சனீஸ்வர பகவான், எமதர்மர் அவதரித்த ஸ்தலம்.
அமைவிடம்:
இத்தலம் திருவாரூர்-மயிலாடுதுறை பேருந்து வழித்தடத்தில் பேரளம் பேருந்து நிறுத்தத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் திருமீயச்சூர் அருகில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம் :
சூரியன், உஷாதேவி மற்றும் சாயாதேவி மூவரும் கூடிய இடம் திருமீயச்சூர் தலத்திற்கு மேற்கே உள்ள கூடியலூர்; அதுவே காலப்போக்கில் கொடியலூர் ஆயிற்று. இத்திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
தல வரலாறு :
இப்புண்ணிய க்ஷேத்திரம் சோழ வள நாட்டின் காவிரி நதியின் தென்பால் உள்ள திருமீயச்சூரின் ( ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமார்ச்சனை ஆரம்பமான அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி ஆலயத்திற்கு ) மேற்கு திசையில் உள்ளது.
அகத்தியர், ஹயக்ரீவர் கூறியபடி லலிதாம்பிகையை தரிசிக்க லலிதா நவரத்தின மாலையை பாடி அம்பாளின் பேரருளைப் பெற்ற பின் சிவபூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். கூடியலூர் என்ற இத்தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய லலிதாம்பிகையை ஆனந்தவல்லியாக நினைத்து ஆனந்தவல்லி உடனுறை அகத்திஸ்வர சுவாமியை பூஜை செய்து பெரும்பேறு பெற்றார்.
சூரியனின் பத்தினிகளான உஷாதேவியும், அவளுடைய நிழலான சாயாதேவியும் மேகநாதரிடம் எங்களுக்கு புத்திரசந்தானம் வேண்டும் என்று வழிபட்டனர். அதற்கு இறைவன் நீங்கள் உங்கள் கணவரோடு இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரனியில் நீராடி அம்பாள் லலிதாவையும் என்னையும் பூஜை செய்தால் அந்த பலன் கிடைக்கும் என வரமளித்தார். அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் இத்தலத்தில் பூஜை செய்தனர். பகவான் சூரியனுக்கும் உஷாதேவிக்கும் எமதர்மனை ஜனிக்கும்படி செய்தார். பின்னர் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் சனீஸ்வர பகவானை ஜனிக்கும்படி அருள்செய்தார்.
அச்சமயத்தில் அசரீரியாக அகத்தீஸ்வரரே எமதர்மராஜனிடமும் சனீஸ்வரனிடமும் இத்தலத்தில் வீற்றிருந்து எங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எமவதையையும் சனி உபாதையையும் நீங்கச்செய்து அருள்புரிய வேண்டும் என கட்டளையிட்டார். அதிலிருந்து கூடியலூரான கொடியலூரில் தென்புறம் எமதர்மனும் வடபுறம் சனீஸ்வரர் பகவானும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்கள்.
கொடியலூரில் லலிதா பரமேஸ்வரி ஆனந்தவல்லியாக பரிபூரணமாக காட்சி தந்து அருளாசி வழங்குகிறாள். ஒரே எல்லையில் அமர்ந்த கோலமாகவும், நின்ற கோலமாகவும் இருந்து அருள்செய்வது மேluம் சிறப்பு, தென்புறம் எமதர்மனும் வடபுறம் சனீஸ்வர பகவானும் அமைந்திருப்பது சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால் இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி, இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும் மரண பயத்தையும் நீக்கி அருளுகின்றார்கள்.
இந்திரனும், தேவர்களும் சனிதோஷம் நீங்க வழிபட்ட ஸ்தலம் :
ஒரு சமயம் இந்திரன் தன்னை சனீஸ்வரபகவான் பிடிக்கப்போகிறார் என்பதை அறிந்து, சனீஸ்வரபகவானிடம் நான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன், நீ என்னை எப்படி பிடிக்கலாம் என்று கேட்க, என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது என பதில் அளித்தார். அப்படியானால் நீ என்னை பிடிக்கும் நேரத்தை சொல்லிவிடு என்று இந்திரன் கேட்க, சனீஸ்வரபகவானும் நேரத்தை கூறினார். தன்னை சனீஸ்வர பகவான் பிடிக்க வருவதை அறிந்த இந்திரன் தான் என்ன செய்வது என்று அறியாமல் ஈசனை வேண்டி நின்றபோது அகத்திய முனிவர் அவ்வழியே வர, அவரை வணங்கி தன்னுடைய இக்கட்டான நிலையை கூறி அபயம் தேடினார். அகத்திய முனிவர் கூற்றுபடி கொடியலூரில் உள்ள ஸ்ரீமங்கள சனீஸ்வரர் அனுகிரக மூர்த்தி மற்றும் எமதர்மர் பிறந்து வளர்ந்து வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலமும், என்னால் ஈசன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்தலமான கொடியலூரில் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளியே செல்லும் கோமுகி வழியில் பெருச்சாளி உருவம் எடுத்து மறைந்திரு என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார். இந்திரனும் அதுபோலவே உருவம் எடுத்து மறைந்துகொண்டார்.
சனீஸ்வர பகவான் கூறிய நேரமும், அகத்தீஸ்வரர் சாயரட்சை பூஜை நேரமும், கூடிவந்தது ;அபிஷேகமும் நடந்தது. அபிஷேக தீர்த்தமும், கோமுகத்தின் வழியே வெளியேறியது. அப்போது பெருச்சாளி உருவில் மறைந்திருந்த இந்திரன் மீது அபிஷேக நீர் பட்டு இந்திரன் புனிதமடைந்தார். சனீஸ்வர பகவான் உக்ரபார்வையிலிருந்து காப்பாற்றப்பட்டார். பின்னர் தன் சுய உருவத்தில் வெளியில் வந்த இந்திரன் சனீஸ்வர பகவானை பார்த்து தான் தப்பித்து விட்டதாக எண்ணி இறுமாந்திருந்தார். உடனே சனீஸ்வர பகவான் புன்முறுவலுடன் நீங்கள் உங்கள் சிம்மாசனத்தை விட்டு கீழ் இறங்கி கோமுகி வழியில் உருமாறி மறைந்து இருந்ததே என் பிடியினால்தான் என்றார். சனீஸ்வர பகவான் பிடியில் இருந்த யாரும் தப்ப முடியாது என்பதை உணர்ந்த இந்திரன், இந்திர லோகத்தில் உள்ள தேவர்கள் அனைவரையும் அழைத்து திருக்கொடியலூரில் தேவ தீர்த்தத்தை உருவாக்கி , புஷ்கரணியில் நீராடி அகத்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை தங்கள் மீது தெளித்துக்கொண்டு புனிதமாக்கி கொண்டனர். பின் இத்திருத்தலத்தில் உள்ள மங்கள சனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நிneeலோத்பவ மலர் சாற்றி, எள் தீபம் ஏற்றி வழிபட்டு இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் சனீஸ்வர பகவானின் உக்ர பார்வையில் இருந்து விடுபட்டு இந்திரன் ராஜா பதவியையும் தேவர்கள் தேவலோகத்தையும் அடைந்தனர் என்பது கோவிலின் தல புராணம் ஆகும்.
எனவே சனீஸ்வர பகவான் அபயஹஸ்தமுடன் இருப்பதால் தன்னை அபயம் என நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் அபயஹஸ்தத்துடன் அனுகிரக மூர்த்தியாக இத்தலத்தில் வீற்றிருந்து மங்களம் உண்டாக்குகிறார். இன்றளவும் இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்களll சுவாமி தரிசனம் முடித்து அகத்தீஸ்வரருக்கு சாயரட்சை பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தங்கள் மீது தெளித்துக்கொண்டு ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவானை வழிபட்டு வருகின்றனர். எனவே இத்தலம் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவான் அவதரித்த திருத்தலம் என்பதால் மற்ற சனீஸ்வர ஸ்தலங்களைவிட முதன்மையான ஸ்தலமாக விளங்குகிறது.
பரிகாரம் :
அகத்தியர் சிவபூஜை செய்த தலமாக இருப்பதால் இங்கு வரும் பக்தர்களுக்கும் சிவனடியார்களுக்கும் சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையிலிருந்து நீங்க அகத்தீஸ்வரரே பைரவர் கோலத்தில் சனீஸ்வர பகவான் எதிரே நின்று தோஷத்தை நீக்கி நற்பலன்களை பெருகச் செய்யும் தலமும் இதுவேயாகும். சனீஸ்வர பகவானால் ஏற்படும் ஏழரைச் சனியின் பாதிப்பு முதல் வாழ்வில் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இந்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது ஸ்தலத்தின் வரலாறு ஆகும்.
ஏழரை நாட்டுச்சனி , அஷ்டமத்து சனி, சனிதோஷம் இருப்பவர்கள் இவ்வாலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானுக்கு ஹோமம் , அபிஷேகம் , கருப்பு வஸ்திரம் சாத்தி, தீபம் ஏற்றி , எள்ளு சாதம் நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்தால் சகல தோஷமும் நீங்கி நன்மை ஏற்படும்.
சனிக்கிழமைகளில் நெய், எள் விளக்கேற்றுதல், எள் சாதம், அன்னதானம் வழங்குதல் ஆசியவற்றால் சனிதோஷம் நீங்கப்பெறலாம்.
பிரார்த்தனை [எமதர்ம பகவான்] :
ஆயுள் நீடிக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள், எமதர்மர் நீதிக்கு அதிபதியாக இருப்பதால் ஏமாற்றப்பட்டவர்கள், பொருளை திருட்டுக்கொடுத்தவர்கள் அதிக அளவில் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். தங்களது கோரிக்கையை ஒரு பேப்பரில் எழுதி அதனை எமதர்மன் சன்னதியில் வைத்து பூஜித்து வருகின்றனர். இவ்வாறு வேண்டுதல் வைக்கப்பட்ட சில நாட்களில் பொருட்கள் திருப்பிக் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. இதனை படிக்கட்டுதல் என்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் (மதியம் 1.30-3.00 மணி) இங்கு ஆயுள் விருத்தி ஹோமம் செய்யப்படுகிறது. சனீஸ்வர பகவானும் எமதர்மரும் சூரியபகவானின் புத்திரர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆகிறார்கள் எனவே சனிக்கிழமை எமகண்ட நேரத்தில் இவரை வழிபடுவது சிறப்பு. சுவாமிக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திகடன் நிறைவேற்றலாம்.
திருக்கோவில் முகவரி :
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் ,
திருகொடியலூர், 609 405
திருமீயச்சியூர் அஞ்சல்,
நன்னிலம் வட்டம் ,
திருவாரூர் மாவட்டம்.
தொடர்புக்கு :
ஸ்ரீ வாஞ்சியம் முத்து குருக்கள் : 94882 66372