கைவல்யாம்பிகை சமேத கார்க்கோடகநாத ஸ்வாமி கோவில், கோடங்குடி
தலபுராணம் :
பூர்வத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் கார்க்கோடகன் மனம் வருந்தி தேவர்களையும் நவக்கிரஹங்களையும் நோக்கி தவமிருக்க, தேவர்கள் கார்க்கோடகனை கிரஹங்களுக்கெல்லாம் அதிபதியும் முக்கண்ணறுமான அக்கைலைபதியை பூஜிக்க சொல்ல கார்க்கோடகன் வில்வாரண்ய க்ஷேத்திரம் என்னும் இந்த ஸ்தலத்தில் பத்மஸரஸ் என்னும் தாமரைத் தடாகத்தை நிறுவி அதன் கரையில் கைலாயபதியை பிரதிஷ்டை செய்து பத்மஸரஸ்ஸில் மலரும் தாமரை மலர்களால் கைலாயபதியை தினமும் சிரத்தையுடன் பூஜித்துவர, உள்ளம் குளிர்ந்த கைலாயபதி கார்கோடனுக்கு காட்சி கொடுத்து, வேண்டும் வரம் கேட்கச் சொல்ல, அகமகிழ்ந்த ஸர்ப்ப ராஜன் கார்க்கோடகனும் தன் சாபவிமோசனம் வேண்ட, கைலைநாதன் அப்படியே அருளினார். மேலும் கார்கோடகன் தான் பூஜித்த கைலைநாதன் தன் பெயர் பூண்டு கலிகாலத்தில் பக்தர்களுக்கு குறைதீர்க்கும்படியும் பத்மஸரஸில் நீராடி இறைவனை தொழும் பக்தர்கள் வாழையடி வாழையாய் வாழவும் நவக்ரஹங்கள் இறைவனுக்குள் அடக்கம் ஆதலாலும் ஸர்ப்பராஜனாகிய தான் பூஜித்ததால் கார்கோடகநாதரை தரிசித்தால் ராகு கேது தோஷங்களும் நீங்கவும் வரம் வேண்டினார்.
இறைவனும் மனம் மகிழ்ந்து அப்படியே ஆகுக என வரம் அருளினார். மேலும் கார்க்கோடகன் இந்த ஸ்தலத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு எல்லைக்குள்ளும், என் வம்சத்தால் யாரும் தீண்டப்படமாட்டார்கள். விதிவசத்தால் தீண்டப்பட்டாலும் அவர்கள் மரணமடைய மாட்டார்கள் எனவும் வாக்கு அளிக்க, இறைவன் உன் விருப்பம்போல் நடக்கும் எனக்கூறி கைவல்யாம்பிகா சமேத ஸ்ரீ கார்க்கோடக நாதராக காட்சி அருளினார். ஸர்ப்பராஜன் பூஜித்து வரம் பெற்றதால் கார்க்கோடகநாதரை பூஜிக்கும் பக்தர்கள் லக்னம், குடும்பம், ஸப்தமம் ஆகிய இடங்களில் ராகு, கேது, புத்திர தோஷங்களால் ஜாதகத்தில் பாதிக்கப்படுகிறவர்கள் குறைகள் நீங்கி, தோஷ நிவர்த்தி ஆகி மனம் மகிழ்ந்து வாழ்வார்கள்.
ராஜராஜேஸ்வரியின் அம்சமாகவும், துர்க்கா ஸ்வரூபமாகவும், தெற்கு நோக்கி இருக்கும் கைவல்யாம்பிகை இகத்தில் தன்னை வணங்குபவர்களுக்கும் மனத்தினால் நினைப்பவர்களுக்கும் அருளும், பொருளும் அளித்தும் மேலும் கைவல்யமாகிய ஸாயுஜ்யத்தையும் உவந்து அளிக்கிறாள்.
நம்மிடையே நடமாடிய தெய்வமான காஞ்சி மாமுனி பெரியவாள் (1951-ல்) இக்கோடங்குடிக்கு விஜயம் செய்து கார்க்கோடகநாதரையும் கைவல்லி அம்பிகையையும் தரிசித்து உளம் மகிழ்ந்து ஸ்தல மகிமைகளை கூறினார். நவக்ரஹங்களில் ராகு கேதுவின் அவதாரமான ஸர்ப்பராஜனால் பூஜிக்கப்பட்டதால், கிரஹங்கள் கார்க்கோடகநாதருக்குள் அடக்கம் என்பதால் இந்த ஸ்தலத்தில் நவக்ரஹ தனிவழிபாடு கிடையாது என்றும் அம்பாள் தெற்கு நோக்கி இருப்பதால் அவளே துர்க்கை அவளே பார்வதியாகி இருப்பதால் தனி துர்க்கா பிரதிஷ்டையும் கிடையாது என்றும் அருள்பாலித்தார். இங்கு அம்மையும் அப்பனும் தானே யாவுமாகி அறம் பொருள் இன்பத்தை வாரி வழங்குகிறார்கள்.
தொடர்புக்கு :
ஆலய அர்ச்சகர்
சிவஸ்ரீ D. கணேச சிவம்
மயிலாடுதுறை.
செல்: 7397045537